November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கருணாநிதி குறுக்கு வழியில் முதல்வரானவர்’; ஸ்ராலினுக்கு முதலமைச்சர் பதில்

நான் முறையாக முதல்வர் ஆனவன்.உங்கள் தந்தைதான் நெடுஞ்செழியனை ஏமாற்றி முதல்வரானார் என தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தான் ஊர்ந்து போய் பதவி ஏற்கவில்லை எனவும் ,நடந்து போய் தான் பதவியேற்றதாக கூறி உள்ள முதலமைச்சர்,உங்கள் தந்தை கருணாநிதி எவ்வாறு முதலமைச்சர் ஆனார் ?என கேள்வி எழுப்பியுள்ளார் .

அப்போது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணாதுரையின் மறைவுக்குப் பின்னர், நெடுஞ்செழியன் தான் முதல்வர் ஆவார் என அனைவரும் எதிர்பார்த்த போது குறுக்கு வழியில் சென்று முதல்வர் ஆனவர் தான் கருணாநிதி.

ஆனால் நான் அப்படி எல்லாம் செய்து முதலமைச்சராகவில்லை.எங்களது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெரும்பான்மையானோர் என்னை தேர்ந்தெடுத்துதான் நான் முதலமைச்சரானேன்.

ஆகவே இவர்கள் வந்த வரலாறு வேறு, நாங்கள் வந்த வரலாறு வேறு எனக் கூறியுள்ள முதலமைச்சர்,ஒரு தலைவர் என்றால் தகுதி வேண்டும்,பண்பு வேண்டும்.ஆனால் அந்த தகுதியே இல்லாத தலைவர் என்றால் அது ஸ்டாலின் தான்.

ஸ்டாலின் உண்மை பேசுவதே கிடையாது.வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு செய்து பேசுவது, ஒருவரை இகழ்ந்து பேசுவது என தரம் தாழ்த்தி பேசும் ஒரே தலைவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான்.

ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் பெட்டி வைத்து மனு வாங்குகிறார்.முதலமைச்சர் ஆனவுடன் அந்த மனுக்களின் மீது 100 நாட்களில் தீர்வு காணப்படும் என கதையளந்து வருகிறார்.

இதெல்லாம் நடக்கிற காரியமா?.ஸ்டாலின் முதல்வராகவும் முடியாது, அந்த பெட்டியின் சீலையும் உடைக்க முடியாது, பூட்டையும் உடைக்க முடியாது.

தமிழகத்தில் புதிய புதிய தொழில்கள் தொடங்கப்பட்டு,மின் மிகை மாநிலமாக தமிழகம் இருப்பதாகவும் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏனெனில் ஸ்டாலினுக்கு நாட்டு மக்களைப் பற்றியும் தெரியாது, நாட்டில் என்ன நடைபெறுகிறது என்றும் தெரியாது.யாராவது எழுதிக் கொடுத்தால் அதை வைத்துக் கொண்டு படிப்பார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.