January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”மக்கள் நலன் காக்கும் மக்களாட்சியை வழங்குவோம்” : மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது

ஜாதி, மத பேதமில்லா மக்கள் நலன் காக்கும் மக்களாட்சியை வழங்குவோம் என்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நீதி மய்ய தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் இன்று காலை வெளியிட்டு வைத்தார்.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்பட்டு, முழு மதுவிலக்கை கொண்டு வருவதே தமது இலக்கு என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 15 – 20% வளர்ச்சியை உறுதி செய்து 60 – 70 லட்சம் கோடியாக உயர்த்துவோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை உறுதி செய்து தனி நபர் வருமானத்தை 7 – 10 லட்சமாக உயர்த்த வழிவகை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் சுத்தமான குடிநீர் – நீலப்புரட்சி என அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இயற்கையும் அறிவியலும் சார்ந்த நிரந்தர பசுமைப்புரட்சி, விவசாய பொருட்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் – ஏற்றுமதி வரை உலக சந்தைமயமாக்கல் செய்யப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அப்துல்கலாம் புரா திட்டம் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு, அரசுப்பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் உலகத்தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எம்.பி.பிஎஸ் படிப்பிற்கு சீட், உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும். தமிழ் மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி என ஒருவருடத்தில் ஆங்கில புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து தொழிலாளர்கள் நலவாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும். மேலும் ஜாதி மத பேதமில்லா மக்களாட்சி அமைப்போம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது