July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழக தேர்தல் களத்தில் எதிரொலிக்கும் ‘ஈழத் தமிழர்’ விவகாரம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முக்கிய இரு கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைகளில் ஈழத் தமிழர் விவகாரங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன .

அ.தி.மு.க அறிக்கையில் முக்கியமாக ‘தனித் தமிழீழம்’ என்ற ஒரு வசனம் இடம்பெற்றிருப்பது தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

தமிழீழம் அமைந்திட அ.தி.மு.க அரசு தொடர்ந்து மத்திய அரசு மூலமாக நடவடிக்கை எடுக்கும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இனப்படுகொலை போன்ற குற்றங்களுக்கு நீதி கிடைத்திட தொடர்ந்து அ.தி.மு.க அரசு பாடுபடும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

இதேவேளை, தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை

  • ஈழத் தமிழர் உட்பட எழுவர் விடுதலை

மத்திய அரசு தாமதமின்றி, உடனடியாக ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தக்க ஆணையிட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உணர்வுபூர்வமாக தொடர்ந்து வலியுறுத்தும்.

  • ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை

இலங்கையில் 13வது அரசியல் சாசன சட்ட திருத்தத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கிடைத்திட,ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மத்திய அரசு மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இலங்கையில் நடந்த இனப்படுகொலை, கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைத்திடவும், குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கிடைத்திடவும், தமிழ் ஈழ மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைந்திடவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது புதிய சர்வதேச நடுநிலை சுதந்திரத் தீர்ப்பாயம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கும்படி ஐக்கிய நாடுகள் சபைக்கும் மத்திய அரசுக்கும் அ.இ. அண்ணா தி.மு.கழகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்.

  • இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை / குடியிருப்பு அனுமதி

இந்திய வாழ் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ‘இரட்டைக் குடியுரிமை’ மற்றும் ‘குடியிருப்பு அனுமதி’ வழங்கிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என இலங்கை தமிழர்கள் குறித்த பல அறிவிப்புகள், பல திட்டங்கள் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை

தி.மு.க.வின் அறிக்கையிலும் போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு உரிய நீதி கிடைக்கவும் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அகதி முகாம்களில் உள்ளோருக்கும் இந்திய குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இலங்கை தமிழர்களின் நலன் காக்க அவர்கள் எடுத்துள்ள முடிவுகளின்படி அரசியல் தீர்வு, பொது வாக்கெடுப்பு ,சர்வதேச விசாரணை  ,குடியுரிமை  போன்ற விடயங்களை உள்ளடக்கியிருக்கிறது

  • ஈழத் தமிழர் நலவாழ்வு

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் ஆகியவை குறித்து சுதந்திரமானதும் , நம்பகத்தன்மை வாய்ந்ததுமான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை  வலியுறுத்தி செயல்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க கழகம் தொடர்ந்து வலியுறுத்தும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப்போன அரசியல் அதிகார பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு, நிரந்தரமான அரசியல் தீர்வு  அமைய இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையே  ஐ.நா சபையின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும், இலங்கையில் புதிதாக உருவாக உள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள்  தமிழர்களுக்கு கிடைத்திடும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்கவும் இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என இந்திய அரசை தி.மு.க.  தொடர்ந்து வலியுறுத்தும்.

  • தாயகம் திரும்பிய ஈழத்தமிழர் குடியுரிமை

இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த ஆயிரக்கணக்கான தமிழர்களும் ,அதேபோல் 1964 இல் ஏற்பட்ட சாஸ்திரி – ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, இலங்கை- இந்திய ஒப்பந்தப்படி தாயகம் திரும்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் இன்றுவரை அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த தமிழர்கள் மற்றும் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 1964 இல் ஏற்படுத்தப்பட்ட சாஸ்திரி- ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்படி ,நாடு திரும்பியவர்களாக பெற்றுக் கொள்ளப்பட வேண்டிய இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களும் அவர்களது குழந்தைகளும் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் உறவுகளுக்கு  இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசை கழக அரசு வலியுறுத்தும்.

இவர்களில் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்கு வேண்டிய  அனைத்து உதவிகளையும் செய்யும்.