அ.தி.மு.க.வினர் வாக்கு கேட்டு வந்தால் ஜெயலலிதா எப்படி இறந்தார் என கேளுங்கள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் தி.மு.க வேட்பாளர் காந்திக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட போதே தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை நீங்கள் எல்லோரும் ஓட ஓட அடித்து விரட்டினீர்கள்.அந்த கோபம் பிரதமர் மோடிக்கு தமிழகம் மீது இருப்பதால் தான் ஜி.எஸ்.டி வரியில் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய ரூ.15 ஆயிரம் கோடியை வழங்கவில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் விலை ஏற்றம் கட்டுப்படுத்தப்படும்.கொரோனா காலத்தில் மோடி மட்டும் ரூ.8,000 கோடி செலவில் 2 சொகுசு விமானங்களை வாங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் ஏற்கெனவே ஒரு நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும்போது ரூ.10 ஆயிரம் கோடியில் புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் கட்டுகிறார்கள். இதெல்லாம் தமிழ்நாடு மக்களின், உங்களின் வரிப்பணம்.
புதிய கல்விக் கொள்கை வந்தால் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைக்கு கூட பொதுத்தேர்வு எழுத வைப்பார்கள்.
எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தமிழ்நாட்டை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார்கள்.கொஞ்சம் ஏமாந்தால் விற்றுவிடுவார்கள்.
அ.தி.மு.க.வினர் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். அப்போது ஒரே ஒரு கேள்வியை கேளுங்கள். ஜெயலலிதா எப்படி இறந்தார் என. இந்தியாவிலே மிகப்பெரிய மருத்துவமனையில் பாதுகாப்புக்காக நிறைய கேமராக்கள் இருந்தபோதும் ஜெயலலிதா அங்கு அனுமதிக்கப்பட்ட பிறகு ஒரு கேமரா கூட வேலை செய்யவில்லை.
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாகவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.