தி.மு.க.வில் குடும்ப வாரிசுகள் தொடர்ந்து ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டிக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருக்கிறார்.
அந்த வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டும் தேர்தல்தான் இது எனக் கூறியுள்ள முதலமைச்சர் பழனிசாமி, தப்பித்தவறி தி.மு.க.வுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டால் நாடு அவ்வளவு தான் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தி.மு.க ரவுடி கட்சி.நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அ.தி.மு.க அரசு மட்டும்தான் என குறிப்பிட்டுள்ளார்.
இப்போதுதான் வேட்புமனுவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட வேண்டும். இம்முறை அதிக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
மேலும், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நாட்டு மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் எனவும் அந்த இருபெரும் தலைவர்களுக்கு வாரிசுகள் கிடையாது, மக்கள் தான் வாரிசுகள்.
தமிழ்நாடு ஏற்றம் பெற நல்ல பல திட்டங்களைத் தந்த, அந்தத் தலைவர்கள் வழியில் தமிழக அரசும் செயல்பட்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி உள்ளது.
ஸ்டாலின் ஹீரோ அல்ல ஜீரோ.அவர்களின் வேடமும் நாடகமும் இனி மக்களிடம் எடுபடாது.இனி மக்கள் தி.மு.க.வை நம்பி ஏமாற தயாராக இல்லை எனவும் தேர்தல் பிரசாரத்தில் பேசியிருக்கிறார்.
தி.மு.க தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் எனக் கூறிவரும் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது.
தி.மு.க.வுக்கு கொஞ்சம் கூட நல்ல எண்ணம் கிடையாது.நேர்மையாக மக்களை சந்தித்து ஆட்சிக்கு வராமல், கட்சியை உடைத்து குறுக்கு வழியில் ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள்.
தி.மு.க.வில் வாரிசு அரசியல் தான் நடைபெறுகிறது.கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது கட்சியில் வாரிசு அரசியல் இல்லை என கூறியவர்கள் தற்போது உதயநிதி ஸ்டாலினை இந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு மாற்றி பேசுபவர்கள் எவ்வாறு ஆட்சி செய்வார்கள்.ஆனால்,அ.தி.மு.க.வில் கட்சிக்கு விசுவாசமாக இருந்தால் எவரும் முதல்வர் ஆகலாம்.
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வலிமையான கூட்டணி, வெற்றிக் கூட்டணி.இந்தக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் அ.தி.மு.க ஆட்சி தொடரும் என அவர் மேலும் தெரிவித்தார்.