July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழகத்தில் 234 இடங்களிலும் தி.மு.க வெற்றி பெறும்’

Photo : Twitter/mkstalin

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் சொந்த ஊரும் சொந்த தொகுதியுமான திருவாரூரில் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கியுள்ளார்.

தமிழகத்தில் 234 இடங்களிலும் தி.மு.க வெற்றி பெறும். அதிமுக ‘வாஷ் அவுட்டாகும்’ என அங்கு மக்களிடையே பேசிய ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

இந்திய நாடாளுமன்றத்தில் இன்றைக்கு 3-வது இடத்தில் தி.மு.க கம்பீரமாக இருக்கும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தீர்களோ.அதேபோல இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என ஸ்டாலின் திருவாரூர் மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

200 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும் என்று ஒரு மாதத்திற்கு முன்னர் சொன்னேன்.

தற்போது கருத்துக்கணிப்புகளின் மூலம் 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மிகப்பெரும் வெற்றியை பெற்றுத்தர வேண்டும் என உங்கள் எல்லோரிடமும் கேட்டு கொள்வதற்காகத்தான் திருவாரூருக்கு வந்திருப்பதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகாலமாக இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கும் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்களிடையே வலியுறுத்தி இருக்கிறார்.

இதன் போது, முதலமைச்சர் பழனிச்சாமியை விமர்சித்த ஸ்டாலின் ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் கலைஞரும், ஸ்டாலினும்தான் என்று வாய்க்கு வந்த படியெல்லாம் அவர் பேசுவதாகவும் கூறியிருக்கிறார்.

“தைரியம் இருந்தால் – தெம்பு இருந்தால் ஜெயலலிதா மரணத்திற்கு ஸ்டாலின்தான் காரணமென்றால் வழக்குப் போடுங்கள். சந்திப்பதற்கு நான் தயார். நீங்கள் தயாரா?”.

ஜெயலலிதா உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த நேரத்தில் அவர் உடல்நலத்தைப் பற்றி வெளியில் சொல்வதற்குக் கூட வகையில்லாத ஆட்சி தான் நடந்துகொண்டிருந்தது.

அத்தோடு, தமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை போன்று தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெயலலிதா மர்ம மரணத்தை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.