November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சாதி மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக சட்டம்; காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பு

(Photo: Tamil Nadu Congress Committee/Twitter)

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கும் மற்றும் ஆணவப் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்கவும் தனிச் சிறப்புச் சட்டங்கள் கொண்டுவரப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தமாக 22 அம்சங்களை உள்ளடக்கிய வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய தமிழகத்தில் மீண்டும் சட்ட மேல் அவை கொண்டுவரப்படும், சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களைப் பாதுகாக்கவும், ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கவும், தமிழகத்தில் புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்து அற நிலையத்துறைக்குட்பட்ட திருக்கோயில்களில், இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

முதியோர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படுவதோடு, அதனை அஞ்சல் துறை மூலம் நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்களுக்குப் பதிலாக, தமிழகத்தில் விவசாயிகளைப் பாதுகாக்கும் புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் உள்ளிட்ட 22 அம்சங்கள் அடங்கிய கவர்ச்சித் திட்டங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது.