November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சொந்த தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரில் 6 ஆம்  திகதி நடைபெற உள்ள  நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.

7 வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி, இம்முறை தனது சொந்த தொகுதியான சேலம் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

1991 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  வெற்றி பெற்றார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், 1989ஆம் ஆண்டு தான் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளித்ததாகக் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகிக்க ஜெயலலிதா வாய்ப்பளித்ததை நினைவு கூர்ந்துள்ள அவர்,தனது தொகுதியான எடப்பாடி வளர்ச்சிபெற அரும்பாடுபட்டுள்ளதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் அடித்தட்டு மக்கள் அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை வரவேற்கிறார்கள் என குறிப்பிட்ட முதலமைச்சர், தேர்தல் அறிக்கை எடுபடுமா? என்பது தேர்தலுக்கு பின்னர் தான் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

6 லட்சம் கோடிகடனில் தமிழக அரசு இருந்தாலும், வளர்ச்சி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் தனது தொகுதியான எடப்பாடியில் அரசு கலைக்கல்லூரி ஒன்று அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதன்போது தெரிவித்துள்ளார்.