July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சட்டமன்றத் தேர்தல்: ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மற்றுமோர் புதிய கூட்டணி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி  தலைமையில் மற்றுமொரு ஒரு புதிய கூட்டணி உருவாகியுள்ளது.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் “அரசியல் பேரவை” கட்சி சார்பாக 20 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அரசு பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம், தொடர்ந்து அமைதி காத்து வந்த நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

2016-ல் தமிழகத்தில் மாற்றம் நிகழ வேண்டும் என கருதி தமிழக இளைஞர்கள், அரசியலுக்கு தம்மை அழைத்ததாகச் செய்தியாளர்களிடம் சகாயம் தெரிவித்திருக்கிறார்.

சமூக மாற்றத்திற்கான பணியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் 2020 ஒக்டோபரில் தன்னுடைய விருப்ப ஓய்வுக் கடிதத்தைத் தமிழக அரசிடம் வழங்கியதாக 2021, ஜனவரி மாதம் அரசுப் பணியில் இருந்து தாம் விடுபட்டதாகவும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில், சகாயம் அரசியல் பேரவை, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய இரு ஆதரவுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக சகாயம் அறிவித்திருக்கிறார்.

“அரசியல் பேரவை” கட்சி சார்பாக 20 தொகுதிகளில் இளைஞர்கள் போட்டியிட உள்ளதாக கூறியுள்ள அவர் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழகம் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிடும்  என  “அரசியல் பேரவை” கட்சியின் சகாயம் கூறியுள்ளார்.

இம்முறை சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கூட்டணி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி, டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி, ஐஏஎஸ் சகாயத்தின் அரசியல் பேரவை கூட்டணி என நான்கு புதிய கூட்டணிகள் களம் காண்கின்றன.