November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேரறிவாளனின் வழக்கு விசாரணையிலிருந்து மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா?; அற்புதம்மாள் கேள்வி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனின் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையிலிருந்து கடந்த முறை போலவே இம்முறையும் மாநில அரசு ஒதுங்கி நிற்கிறதா? என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருக்கின்ற நிலையில்,இது விடயம் தொடர்பில் அற்புதம்மாள் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

‘அறிவின் விடுதலை வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மாநில அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்க முடியாது என ஆளுநர் அறிவித்துவிட்டார்.

சட்ட ரீதியாக அதுகுறித்து சொல்ல எதுவும் இல்லை என கடந்த முறை போலவே மாநில அரசு ஒதுங்கி நிற்க போகிறதா? அல்லது மூத்த வழக்கறிஞரை அமர்த்தி வாதிட போகிறதா?’ என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அற்புதம்மாளின் இந்த டுவிட்டர் பதிவு சமூக வலைத் தளங்களில் தற்போது பகிரப்பட்டு வருவதுடன், பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.