file photo
தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி நேற்றையதினம் வெளியிடப்பட்ட திமுக தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை நேற்று கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்தத் தேர்தல் அறிக்கையில் முக்கிய 500 அறிவிப்புகள் இடம்பெற்று இருந்ததோடு, இன்று புதிதாக 5 வாக்குறுதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதற்கமைய விவசாயிகளுக்கு எதிரான சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படமாட்டாது, காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது, 2019 இந்தியக் குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, ‘இந்திய முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட வலியுறுத்தப்படும், 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை நிராகரிக்கப்படும்’ என்ற வாக்குறுதிகளும் திமுக அறிக்கையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தி.மு.கழகத்தின் அறிக்கையில் சில திருத்தங்கள்!
பத்திரிகை, ஊடக நண்பர்கள் அவற்றைக் கவனத்தில் கொண்டு செய்திகளில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! pic.twitter.com/3fVpnLobvc
— M.K.Stalin (@mkstalin) March 14, 2021