photo : Twitter/Architecture India
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்லி என்ற இடத்தில் வசிக்கும் கட்டடத் தொழிலாளி சத்தாம் சலார் கான் பதான்; இரண்டு உறவினர்களின் உதவியோடு உள்ளூரில் கட்டட வேலைகள் செய்து வருகின்றார்.
சில தினங்களுக்கு முன்னர், வழமைபோல் நிலத்தைத் தோண்டிய அவரது உதவியாளர்களுக்கு ஆச்சரியம்; மண்ணோடு மண்ணாக வந்த சில தங்க நாணயக் குற்றிகளை கொண்டுசென்று பதானிடம் காண்பித்தார்கள்.
உடனே அந்த இடத்திற்கு சென்ற பதான், உதவியாளர்களுடன் சேர்ந்து பழைய குழிக்கு அருகே இருந்த மண் மேடு ஒன்றை தோண்ட ஆரம்பித்தார்.
ஆச்சரியம் மேல் ஆச்சரியம்.. தோண்டத் தோண்டத் தங்கக் காசுகள்.. பதானுக்கும் அவரது உதவியாளர்கள் இருவருக்கும் இப்படி 216 தங்க நாணயங்களும் உடைந்த வெண்கலக் குவளை ஒன்றும் கிடைத்தன.
‘அடித்தது அதிர்ஷ்டம்’ என்ற மகிழ்ச்சியில் யாருக்கும் சொல்லாமல் அவற்றை வீட்டில் கொண்டுபோய் பதுக்கி வைத்திருந்தார்கள். ஆனால் எப்படியோ தங்கப் புதையல் செய்தியை உள்ளூர் பொலிஸார் மோப்பம் பிடித்துவிட்டார்கள்.
பதானின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி நாணயங்களை கைப்பற்றிய பொலிஸார், தொல்பொருள்-பெறுமதி மிக்க தங்க நாணயங்களை உடமையில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தியுள்ளார்கள்.
கி.பி 1720- 1750 காலத்தைச் சேர்ந்த இந்த நாணயங்களில், ‘ராஜா முஹம்மது ஷா’ என்ற முகலாய மன்னரின் பெயர் உருது மற்றும் அரபு மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொன்றும் இந்திய மதிப்பில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய் வரை பெறுமதி கொண்ட இந்த நாணயங்களின் இன்றைய மொத்தப் பெறுமதி 1.3 கோடி ரூபாய்க்கு மேல் என்றும் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.
மொத்தமாக 2 கிலோ 357 கிராம் எடைகொண்ட தங்க நாணயங்களும் 525 கிராம் எடைகொண்ட வெண்கலக் குவளையும் இப்போது அரசுடமையாக்கப்பட்டுள்ளன.