July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா; நாக்பூரில் பொது முடக்கம் அறிவிப்பு

Photo : MoHFW_INDIA

இந்தியாவில் வேகமாக சரிந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருவதால் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் நாளாந்த தொற்றாளர் எண்ணிக்கை வேகமாக உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம்தரும் வகையில் அதிகரித்துவருவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து மார்ச் 15 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஒருவார காலத்திற்கு நாக்பூரில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸினால் மிகமோசமான தாக்கத்தை எதிர்கொண்ட மகாராஷ்டிராவின் நாக்பூரில் பெப்ரவரி இரண்டாம் வாரம் முதல் இவ்வாறு கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

11 ஆம் திகதி முதல் மகாராஷ்டிராவின் ஜல்கோன் மாவட்டத்தில் பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முடக்கல் நிலைக்கு மத்தியிலும் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகள் தொடரும் என மகாராஷ்டிராவின் சுகாதார அமைச்சர் நிதின் ராவுட் தெரிவித்துள்ளார்.

அரச அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் 25 வீதமான தொழிலாளர்களிற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ள அவர், உணவகங்கள் மூடப்பட்டிருக்கும் அதேவேளை, வீடுகளுக்கு விநியோகம் இடம்பெறும் எனவும் கூறியுள்ளார்.

ஊரடங்கை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களாக நாக்பூரில் நாளாந்தம் ஆயிரத்திற்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 2000க்கும் அதிகமானவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதேவேளை, இந்தியாவில் நேற்றைய தினம் 21,668 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த எண்ணிக்கை 11,305,979 ஆக உயர்வடைந்துள்ளது.