தமிழக துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது தொகுதியான தேனி, போடிநாயக்கனூரில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதி மக்கள் தனக்கு அமோக ஆதரவை தருவார்கள் என நம்புவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.
இதன்போது, செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முதலாக போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டபோது அதிகளவிலான வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.
“எனது தொகுதி மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறேன், அது போடி மக்களுக்கும் தெரியும்” என செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த இரண்டு தேர்தல்களிலும் போடிநாயக்கனூர் மக்கள் தன்னை வெற்றிபெற செய்ததாகவும், அந்த நம்பிக்கையிலேயே இம்முறையும் மக்களுக்கு சேவை செய்வதற்காக, மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தனது முழுக் கடமையையும் தொகுதி மக்களுக்கு செய்திருப்பதாகவும், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பன்னீர்செல்வம் .