பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானி உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் திகதி பாபர்மசூதி இடிக்கப்பட்டமை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயல் இல்லை. சமூக விரோத கும்பல்கள் அதில் தொடர்புபட்டிருந்தன என தெரிவித்துள்ள உத்தர பிரதேச நீதிமன்றம் அத்வானி, உமாபாரதி உட்பட குற்றம் சாட்டப்பட்ட 32 பேரையும் விடுதலை செய்வதாக அறிவித்துள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் மசூதி அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவே முயன்றனர் என சிபிஐ நீதிபதி எஸ்.கே.யாதவ் தெரிவித்துள்ளார். மசூதியை இடித்து தரைமட்டமாக்கிய இந்துக் குழுவினரை சமூக விரோதிகள் எனவும் அவர் வர்ணித்துள்ளார்.
சிஜபி சமர்ப்பித்த வீடியோ மற்றும் ஏனைய ஆதாரங்கள் மூலம் சதிமுயற்சியை நிரூபிக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்வானி உட்பட முக்கிய தலைவர்கள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிராத அதேவேளை வீடியோ மூலம் நீதிமன்ற அமர்வை பார்வையிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மசூதி இடிக்கப்படுவதற்கு முன்னர் 1992இல் அத்வானி பாபர் மசூதிக்கு எதிராக இரத யாத்திரையை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.