July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்!

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் வெட்கக்கேடான செயல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், ‘இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்’ எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக சட்டத்திற்கு முன் கொண்டுவர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடக்காத வண்ணம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கி வருவதால், திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், நேற்று நந்திகிராம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மம்தா பானர்ஜி, பிருலியா என்ற இடத்தில் உள்ள கோயிலில் வழிபாடு செய்துவிட்டு தனது காரில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது, அங்கு நின்ற ஐந்து பேர், காரின் முன்பக்க கதவை தள்ளியதில், அது மம்தாவின் காலில் பலமாக மோதியதாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் வலி ஏற்படவே மம்தா காரில் ஏற முயன்றபோது, அந்த ஐந்து பேரும் அவரை கீழே தள்ளிவிட்டதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் வேண்டுமென்றே தன்னை தள்ளிவிட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் மம்தா பானர்ஜி, இது திட்டமிட்ட சதி என்று கூறியுள்ளார்.

மம்தா பானர்ஜி காலில் கடும் வீக்கமும் இடுப்பு பகுதியில் அடிபட்டும் இருப்பதால், தற்போது அவர் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சருக்கு சிகிச்சையளிக்க 5 பேர் கொண்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவை மேற்கு வங்க அரசு நியமித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை தருமாறு ஆளுநர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.