இந்தியாவின் மேற்கு வங்கத்தில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநில முதல்வர் “மம்தா பானர்ஜி” தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணாமுல் கட்சியின் தலைவரும் மேற்கு வங்கத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மம்தா வேட்புமனு தாக்கல் செய்வதற்காகச் சென்றிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து நந்திகிராமில் உள்ள துர்க்கா கோயிலில் வழிபட்ட பின் வாகனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வேண்டுமென்றே தள்ளிவிட்டதாக மம்தா பானர்ஜி குற்றஞ் சாட்டியிருக்கிறார்.
இதனால் தனது காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது திட்டமிட்ட தாக்குதல் எனவும், இந்த சம்பவத்துக்கு பின்னால் நிச்சயமாக சதி உள்ளதெனவும் அவர் சாடியிருக்கிறார் .
இதன்போது தன்னை சுற்றி காவலர்கள் யாருமே இல்லை எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்குதலுக்கு உள்ளான இந்த சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ஆம் திகதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ஆம் திகதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்கு எண்ணும் நடவடிக்கை மே 2 ஆம் திகதி நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.