July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விவசாயிகள் போராட்டம்; பிரிட்டிஷ் நாடாளுமன்ற விவாதம் தொடர்பில் இந்தியா கண்டனம்

இந்திய விவசாயிகள் முன்னெடுத்துவரும் போராட்டம் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்து பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டமை தொடர்பில் இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ள அதேவேளை,பிரிட்டிஸ் தூதுவரிடம் இந்தியா தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இணையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட்ட 106,000 கையெழுத்துக்கள்  அடங்கிய மனு ஒன்று பிரிட்டிஸ் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் 8 ஆம் திகதி  இந்திய விவசாயிகளின் போராட்டம் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்த விவாதம் இடம்பெற்றது.

இதன் போது, விவசாயிகளின் போராட்டத்தை இந்தியா கையாளும் விதம் குறித்து அனைத்து கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர்.

இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டிஸ் அரசாங்கம் இரு நாட்டு பிரதமர்களும் சந்திக்கும்போது குறித்த விடயம் தொடர்பில் கவலையை வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே, பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் தனது நாட்டின் விவகாரம் விவாதிக்கப்பட்டமை குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் “தவறான கூற்றுக்கள்” கொண்டது என குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு இந்திய வெளிவிவகார செயலாளர், டெல்லியில் உள்ள பிரிட்டிஸ் தூதுவரை அழைத்து பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் “உண்மைக்கு புறம்பானது” என இந்தியாவின் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

குறித்த விவாதமானது இன்னொரு ஜனநாயக நாட்டின் அரசியலில் மோசமாக தலையிடும் விடயம் என வெளிவிவகார செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் வாக்குகளை மையமாக கொண்ட நடவடிக்கை எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.