அதிமுக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த கட்சி தான் விஜயகாந்தின் தேமுதிக.
இந்நிலையில் இந்த சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக கேட்ட தொகுதிகளை அதிமுக வழங்க மறுத்ததாகவும் குறைந்த தொகுதிகளை ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் முடிவு எட்டப்படாத நிலையில் தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிக்கை வெளியாகியிருக்கிறது.
இது குறித்து தேமுதிகவின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறது.
மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில், இன்றிலிருந்து 09.03.2021 அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேமுதிக மற்றும் தமாகாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
பாமகவுக்கு சமமாக 23 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என தேமுதிக வலியுறுத்தி வந்த நிலையில், 13 அல்லது 14 தொகுதிகளை ஒதுக்க அதிமுக திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அதிருப்தி அடைந்த தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளது.
கடந்த தேர்தல்களில் அதிமுகவின் வெற்றியை உறுதி செய்ததில் தேமுதிக முக்கிய பங்கு வகித்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இதில் முக்கியமாக விஜயகாந்தின் தேமுதிக பெரும்பான்மையான மக்கள் ஆதரவைப் பெற்ற கட்சியாக இருக்கிறது.
அத்தோடு, அதிக அளவிலான வாக்குகளை பெற்றிருந்தது தேமுதிக.
அதன் அடிப்படையில் தான் இம்முறையும் அதிக அளவிலான தொகுதிகளை அதிமுக கூட்டணியிடம் தேமுதிக கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்தான் விஜயகாந்த் .
திமுகவை பின் தள்ளி எதிர்க்கட்சி நாற்காலியில் அமர்ந்து சட்டசபையை கலக்கியவர் இவர்.
ஆனாலும் கடந்த சில தேர்தல்களில் வாக்கு விகிதத்தில் தேமுதிக சறுக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடிப்படையாக வைத்தே தேமுதிகவிற்கு அதிமுக கூட்டணியில் குறைந்தளவு தொகுதிகளை ஒதுக்கியதாகவும் தெரிகிறது .
ஏற்கனவே, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு தற்போது விஜயகாந்தின் தேமுதிக இந்த 5 கட்சிகளும் திடீரென தேர்தல் நெருங்கும் சமயத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகியிருப்பது சாமர்த்தியமான முடிவா என்பது தேர்தல் முடிந்த பின்னரே தெரியவரும்.
இருந்தபோதிலும் இந்த பத்தாண்டு ஆட்சி காலத்தில் அதிமுகவின் சாதனைகளும், மக்களுக்கு செய்த சேவைகளையும் வைத்து மக்கள் இறுதி தீர்ப்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
தேமுதிக கடந்த தேர்தல்களில் அதாவது, 2011இல் இருந்ததை விட அதன் பின்னர் போட்டியிட்ட தேர்தல்களில், அதன் வாக்கு சதவிகிதம் குறைந்து வந்துள்ளதை புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நோக்கும்போது தெளிவாகின்றது.
2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றிபெற்று முதல் முறையாக எதிர்க்கட்சித் தலைவரானார். இதில் 7.9 சதவீத வாக்குகளைப் பெற்றது.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 5.1 சதவீதம் வாக்குகளை பெற்றது.
போட்டியிட்ட 14 தொகுதிகளில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்து 104 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 2.4 சதவீத வாக்குகளை பெற்றது.
104 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியிலும் தேமுதிக வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலில் தான் தேமுதிகவின் வாக்கு பாதியாக குறைய தொடங்கி இருக்கிறது.
2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஒவ்வொரு தேர்தலிலும் சரிவை சந்தித்து வந்திருக்கிறது தேமுதிக.
இந்நிலையில் கடந்த தேர்தல்களில் ஒப்பிட்டு தான் இந்த முறை தேர்தலில் தேமுதிகவிற்கு குறைந்த தொகுதிகளில் ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிகவிற்கு மக்கள் நீதி மையம் அழைப்பு விடுத்திருக்கிறது.
சுதீஷ், பிரேமலதாவை சந்தித்து அழைப்பு விடுப்பேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் பொன்ராஜ் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் நீதி மையம் விடுத்துள்ள அழைப்புக்கு தே.மு.தி.க என்ன பதிலை வழங்கும் என பொருத்திருந்து பார்க்கலாம்.