குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1,500 ரூபா வழங்கப்படும் எனவும், ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் கூறி இருக்கிறார்.
மிக விரைவில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தி.மு.க.வின் பத்தாண்டு செயல் திட்ட அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார் .அதில் ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறியிருந்தார்.
இதனை விமர்சித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, தங்களது திட்டத்தில் இருந்து கசிந்த தகவலைத் தான் தி.மு.க தெரிந்து கொண்டு இந்த ஆயிரம் ரூபா தொகை அறிவித்துள்ளதாக சாடியுள்ளார்.
மார்ச் -12ம் திகதிக்குள் அ.தி.மு.க வேட்பாளர் பட்டியல் முழுமையாக வெளியிடப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.