மூன்றாவது அணிக்காக என்னிடம் பேசிய காங்கிரஸ், திமுகவிடம் தவழ்ந்து போய் தொகுதி வாங்குகிறது என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
வெள்ளைக்காரனை விரட்டிய காங்கிரஸ் சில தொகுதிகளுக்காக கொள்ளைகாரர்களின் காவலர்களாக மாறிவிட்டது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு அதனை இடையில் முறித்துக் கொண்டு, மீண்டும் திமுகவிடம் சென்ற காங்கிரஸை கமல் இவ்வாறு கடுமையாக சாடியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி பற்றி பேசியது குறித்து முதன் முறையாக கமல்ஹாசன் தகவல்களை கசியவிட்டு இருக்கிறார்.
தற்போது திமுகவுடன் தொகுதி பங்கீட்டில் கையெழுத்திட்டு இருக்கும் காங்கிரஸ், மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அது வதந்தி எனவும் கூறி வருகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கூட்டணிக்காக காங்கிரஸார் தன்னிடம் பேசியது உண்மை என கூறியிருக்கிறார்.
இது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்னைய தேர்தல்களில் 101 இடங்கள் வாங்கிய காங்கிரஸ் இன்று குறைந்த தொகுதி களுக்காக தவழ்ந்து செல்கிறது என விமர்சித்துள்ளார்.
மேலும் பா சிதம்பரம் குழுவினர் தன்னை காங்கிரஸிற்கு வருமாறு அழைத்ததாகவும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.
அவ்வாறு அழைத்தவர்கள் தற்போது மூன்றாவது அணி வென்றதாக சரித்திரமே இல்லை எனக் கூறுவதாகவும், இதெல்லாம் சாத்தியமே இல்லை என கூறிக்கொண்டு அழைத்தது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது தந்தை காங்கிரஸில் இருந்ததாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
100 ஆண்டுகள் பழமைவாய்ந்த கட்சி, சோபாவில் உட்கார்ந்து பேசலாம் வாங்க என்று கூறினால், இல்லை, நாங்கள் தவழ்ந்தே போய்க் கொள்ளுகிறோம் என கூறுவதாக கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
மேலும் திமுக தனது கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு ஆறு ஆறாக தொகுதிகளைப் பங்கிட்டுக் கொடுத்திருப்பதை கமல்ஹாசன் விமர்சித்திருக்கிறார் .
பேசிப் பேசி பார்த்துவிட்டு முடியாமல் இறுதியில் கொடுத்ததை வாங்கிக் கொண்டு ஆறு மனமே ஆறு என்று வந்து விடுகிறார்கள் என கிண்டலாக பேசியிருக்கிறார்.
இவ்வளவு பெரிய கட்சி திமுகவிடம் தவழ்ந்து செல்லலாமா என கேட்டு உள்ள கமல்ஹாசன், இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கற்றுக் கொண்டீர்களா என கேட்டிருக்கிறார்.
ஆனால் மீண்டும் வருவீர்கள், செய்த தவறை சொல்ல வேண்டியது எனது கடமை என கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.