November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“ஐநாவில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துவிடக் கூடாது”: மு. க. ஸ்டாலின்

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் போர்க்குற்ற விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் வாக்களிக்குமாறும் ஏனை உறுப்பு நாடுகளின் ஆதரவை திரட்டும் படியும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின்,

“இலங்கை அரசினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி லண்டனில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சகோதரி அம்பிகையின் உணர்விற்கும், இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களின் உணர்விற்கும் – தொப்புள் கொடி உறவாம் ஈழத்தமிழர்களின் மீது தமிழ்நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களுக்கு இருக்கும் உணர்விற்கும் மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒருமுகமாக, ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு முன்வைத்திருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தக் கோரிக்கைகளை ஆதரித்து பிரதமருக்குக் கடந்த ஜனவரி மாதத்திலேயே கடிதம் எழுதி – அதில் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையொப்பமிட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கடிதத்தில், கடந்த காலத்தில் ஐநாவில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததை நினைவூட்டியிருந்ததுடன் தற்போதும் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தில் இந்தியா ஒருங்கிணைந்து செயல்பட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, ஈழத்தமிழர் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஆதரித்தும் – ஈழத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் இந்தியா வாக்களிப்பதுடன் அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் இந்திய பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

“ஈழத்தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குச் செல்வதை ஐ.நா மனித உரிமை மன்றக் கூட்டத்தில் உறுதி செய்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது நேரடிப் பார்வையில் எடுத்திட வேண்டும் எனவும் – இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்துவிடக் கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” என மு.க.ஸ்டாலின் இறுதியாக குறிப்பிட்டுள்ளார்.