(photo : Facebook/Indian national congress)
திமுக கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி- காங்கிரஸுக்கு இடையே தொகுதி ஒதுக்கீடு குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில், நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து 25 தொகுதிகளுக்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அத்தோடு, கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடவும் திமுக ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து, கடந்த சில தினங்களாக இரு கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த தொகுதி பங்கீட்டு சலசலப்பு முடிவுக்கு வந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் இந்த தடவை 180 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளது.
இதுவரை, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 3 கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளையும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது.
மேலும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது.