January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வைகோவுக்கு 6 தொகுதிகள்; திமுக சின்னத்தில் போட்டியிடும் மதிமுக

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றன.

இந்நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

அதேபோல் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் 6 தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

பலகட்ட பேச்சுவார்த்தைகளிலும் ஒத்துப்போகாத மதிமுக தற்போது 6 தொகுதிகளுக்கு இணங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட போவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருக்கிறார்.

தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வைகோ ,தமிழகத்திற்கு முதல்வராக வரக்கூடிய தகுதி கொண்ட தலைசிறந்த முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மதிமுகவின் ஆற்றலை திமுகவுக்காக பயன்படுத்துவோம் என வைகோ தெரிவித்திருக்கிறார்.

செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பிரச்சாரம் மேற்கொள்ள 12 நாட்களே இருப்பதாகவும் குறைந்த காலத்தில் தனிச்சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது சாத்தியம் இல்லை என்பதால், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.

திராவிட இயக்க பூமியில் பாஜகவின் ஏவல்களாக வருகின்ற சக்திகளை முறியடிக்க திமுகவுக்கு முழு ஆதரவு தருவோம் என வைகோ தெரிவித்திருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் அளித்த உறுதிமொழிக்கு ஏற்ப ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருப்பேன் என கூறியிருக்கிறார் வைகோ.