அதிமுக கூட்டணியில் பாஜக அதிகமான தொகுதிகளைக் கேட்டு வந்த நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 20 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய உடன்பாடு காணப்பட்டுள்ளது.
தேசிய கட்சியான பாஜகவுக்கு தமிழகத்தில் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கியிருந்த நிலையில், 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகும் பாஜகவிற்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டிருப்பது கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட தொகுதிகளைவிட சற்று அதிகமாகும் எனக் கூறப்படுகின்றது.
அதிமுக கூட்டணியில் 2 ஆவது பெரிய கட்சியாக இடம்பெற வேண்டுமென்பதில் பாஜக உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜகவுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27 ஆம் திகதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் 3 மணி நேர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பேச்சுவார்த்தையில் 60 தொகுதிகள் அடங்கிய பட்டியலை வழங்கியதில், 33 இடங்களை நிச்சயம் ஒதுக்க வேண்டும் என பாஜக கேட்டுக்கொண்டதாகத் தெரியவருகின்றது.
ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு, 170 இடங்களில் அதிமுக களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் உள்ள அடுத்த முக்கிய கட்சியான தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.
தேமுதிகவுக்கு 15 சட்டமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா உறுப்பினர் பதவியும் வழங்க அதிமுக முன் வந்துள்ள நிலையில், தேமுதிக கூடுதல் இடங்களை கேட்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வரை திமுக, காங்கிரஸ் கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.