கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் நேற்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
குறித்த இறுதி அறிக்கைகளை ஜனாதிபதியின் சட்டப்பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்தா ரோஹணதீர, சபாநாயகரிடம் கையளித்திருந்தார்.
இதில் அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையானது மூன்று பகுதிகளை கொண்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 2019 நவம்பர் 16 வரையான காலப்பகுதியில் அரசாங்க அதிகாரிகள், கூட்டுத்தாபன பணியாளர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் பழிவாங்கல்கள் குறித்து ஆராய்வதற்கு ஜனாதிபதிவிசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம்திகதி முதல் 2018ஆம் திகதி டிசம்பர் மாதம் 31ஆம்திகதி வரையான காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மற்றும் மோசடி குறித்து விசாரணை செய்ய மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.