July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் பல கட்சிகள் வரத் தயாராக உள்ளன’

விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை .

இந்நிலையில் அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் அ.தி.மு.க கூட்டணி விவகாரம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மாநிலங்களவை சீட்டுக்காக தே.மு.தி.க கெஞ்சவில்லை எனவும் கூட்டணிக்காக அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது என்று சுதீஷ் சாடியிருக்கிறார்.

விஜயகாந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் பல கட்சிகள் வரத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இல்லை என்றால் அ.தி.மு.க என்ற கட்சியே இருந்திருக்காது என திருவண்ணாமலை ஆரணி அருகே நடந்த தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டத்தில் தே.மு.தி.க துணைச் செயலாளர் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க -தே.மு.தி.க இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், சுதீஷ் இவ்வாறு பேசியிருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது

அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது .

பா.ஜ.க உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் தே.மு.தி.க.விடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், தே.மு.தி.க உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.இதனால் தே.மு.தி.க ,அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெறுமா அல்லது வேறு கூட்டணிக்கு செல்லுமா என்ற கருத்து நிலவி வருகிறது.

திடீரென தே.மு.தி.க இப்படி பேசுவதற்கு என்ன காரணம் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.கூட்டணிப் பேச்சுவார்த்தை இழுபறி நிலையில் இருப்பதால் அடுத்த கட்ட நகர்வை நோக்கி தே.மு.தி.க செல்கிறதா என்று ஒரு சந்தேகம் எழுகிறது.