July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்’: சசிகலா திடீர் அறிவிப்பு

அரசியலை விட்டு ஒதுங்குவதாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலா திடீர் அறிவி்ப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சசிகலா இன்றிரவு அறிக்கை ஒன்றில் தனது முடிவை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கை தேர்தலில் ஆளும் அதிமுகவிற்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை.

சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், “நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன்” என கூறியுள்ளார்.

“ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன்” எனவும் சசிகலா தெரிவித்திருக்கிறார்.

“ஜெயலலிதாவின் ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் சகோதரியாக இருந்தேன், ஜெயலலிதா மறைந்த பிறகும் அப்படியே இருப்பேன்.

நமது பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி”

– என்று தனது அறிக்கையை முடித்திருக்கின்றார் சசிகலா.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவின் பின் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி விடுதலையானார்.

இதனைத் தொடர்ந்து பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகவும், மக்களை விரைவில் சந்திப்பேன் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

“அடக்கு முறைக்கு நான் அடிபணிய மாட்டேன்” என்றும் சசிகலா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.