எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
திமுக உடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை நிலவும் சூழ்நிலையிலேயே வைகோ இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மதிமுக தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்சியினர் விரும்புவதாகவும் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும் எனவும் கூறியுள்ளார்.
திமுகவை பொறுத்தவரை, அந்த கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன.
நேற்று 2-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து திமுக உடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், இரட்டை இலக்கத்தில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை திமுக முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் சந்தித்து, அவசர ஆலோசனை நடத்தினர்.
மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது.