November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரதமர் மோடி, தமிழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே நினைக்கிறார்’ – திருநெல்வேலியில் ராகுல்

(Photo:Congress/ Twitter)

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேர்மையில்லாதவராக இருப்பதால்தான், பிரதமர் மோடிக்கு எதிராக எந்தக் கேள்வியும் கேட்க முடியவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத்தேர்தல் பிராசாரத்திற்கு தமிழகம் விஜயம் மேற்கொண்டுள்ள ராகுல் இன்றைய தினம் திருநெல்வேலி மக்களிடையே பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் மோடி, தமிழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே நினைக்கிறார் எனவும் ரிமோட் மூலம் தான் மத்திய அரசு தமிழகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்தியாவில் எந்த மாநிலத்துக்குச் சென்றாலும், வேலையில்லாத இளைஞர்களை அதிகமாக இருப்பதைக் காண முடிவதாகவும் வேலை என்பது பெரிய சவாலாக இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இந்தியா எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்பதை தமிழகம்தான் நிர்ணயிக்க போகிறது. இது எனது உணர்வு. இதற்கு காரணம் தெரியவில்லை.

மேலும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான சிறு, குறு தொழிலாளர்கள் உள்ளனர். சீனாவின் மிரட்டலையும் நாட்டின் பொருளாதார படையெடுப்பையும் எதிர்கொள்ள சிறு, குறு தொழில்களால் தான் முடியும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை திருநெல்வேலியில் செயின்ட் சேவியர் கல்லூரி பேராசிரியர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

கல்வி முறைக்கான கொள்கையை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் பேசி உருவாக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக கல்வி கொள்கை என்று நமது நாட்டில் புதிய கொள்கையொன்று உருவாக்கப்படவில்லை.

அத்தோடு கல்வி என்பது பணம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன், நாங்கள் ஆட்சிக்கு வரும்போது, கல்வியில் உதவித்தொகை மாணவர்களுக்கு தரப்படும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.