November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழ் மொழியை கற்றுக்கொள்ளாதது வருத்தமளிக்கின்றது’ – மான் கி பாத் நிகழ்வில் பிரதமர் மோடி

தமிழ் இலக்கியம் மிகவும் அழகானது என பெருமிதம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதனைக் கற்றுக்கொள்ளாதது தமக்கு வருத்தம் அளிப்பதாகக் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ‘மனத்தின் குரல் நிகழ்ச்சி’ (‘மன் கி பாத்) மூலம் மக்களிடம் உரையாற்றும் பிரதமர் மோடி, இன்றைய தினம் தனது 74ஆவது நிகழ்வில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உலகின் மிகவும் தொன்மையான தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது தமக்கு வருத்தம் அளிப்பதாகவும்  அதனைக் கற்க பலமுறை முயன்றும் முடியாமல் போனது’ எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று. நமது அறிவும், தன்னம்பிக்கையும் வலிமையாக இருந்தால் எதை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. தற்போதைய இளைஞர்களிடம் புது மாற்றத்தை உணர முடிகிறது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நீராதாரங்களைப் பாதுகாத்தல், கொரோனா வைரஸுக்கு எதிரான தொடர் போராட்டங்கள், வேலைவாய்ப்பு ஆகியவை குறித்தும் மோடி உரையாற்றியுள்ளார்.

அத்தோடு பருவமழை தொடங்கும் முன், நீர்நிலைகளைச் சுத்தம் செய்யவும், மழைநீரை சேகரிப்பதற்கு 100 நாள் பிரசாரம் செய்ய இந்த நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி.

மேலும் நீரைப் பாதுகாக்கும் விடயத்தில் அனைவருக்கும் கூட்டுப் பொறுப்பு அவசியம் தேவை எனவும் உள்நாட்டில் உற்பத்தி பொருட்களை நினைத்து மக்கள் பெருமைப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.