அ.தி.மு.க.வில் இருந்து விலகிய,சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமலஹாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சரத்குமார்.
சரத்குமாருடன் இந்திய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ரவிபாபுவும் உடன் சென்றுள்ளார் .
கமல்ஹாசனிடம் கூட்டணி அமைக்க வருமாறு சரத்குமார் அழைப்பு விடுத்திருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், கூட்டணி பற்றி கமலிடம் பேசியதாகவும் அவரிடம் இருந்து நல்ல முடிவு வரும் என எதிர்பார்த்துள்ளதாகவும் கூறி இருக்கிறார். .
மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்தேன், யார் முதல்வர் வேட்பாளர் என்பதை விட வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தால்தான் எதையும் வெற்றி பெற முடியும் என்று நான் நினைக்கிறேன் என சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய சரத்குமார், பண அரசியல் ஒழிய வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.பணத்தை வாங்கிக்கொண்டு வாக்கு போட வேண்டாம் என மக்களை வலியுறுத்தி இருக்கிறார் .
காலில் விழுந்து கேட்கிறேன் பணம் வாங்காதீர்கள்.மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதற்கு இந்த பண அரசியலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்திருக்கிறார்
அ.தி.மு.க.வுடன் பத்தாண்டு காலம் பயணித்துள்ளதாக கூறியுள்ள சரத்குமார், கூட்டணி குறித்து யாரும் பேசாததால் அ.தி.மு.க.வில் இருந்து விலகியதாக குறிப்பிட்டுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி,மக்கள் நீதி மய்யம்,இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது பரவலாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது .