January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தமிழக அரசை கட்டுப்படுத்துவதுபோல் தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது’ : ராகுல்காந்தி

(Photo:Congress/Twitter)

தமிழக அரசைக் கட்டுப்படுத்துவதுபோல் தமிழக மக்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசு தமிழ் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும், மதிப்பதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலையொட்டி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்வதற்காக தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது நமது நாடு பல்வேறு கலாசாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும் கொண்டது. ஆனால் மத்திய அரசு அதனை மதிப்பதில்லை.

இங்குள்ள அதிமுக அரசோ மத்திய அரசின் அடிமை அரசாக செயற்படுகிறது. தொலைக்காட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்குவதைப் போல், தமிழக அரசை மோடி இயக்குகிறார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிட்டது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. ஆனால், இன்று மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நல்ல அரசையும் மக்களுக்கு நல்லது செய்யும் அரசையும் கொண்டு வர நாம் நினைக்கிறோம். ஒரு கருத்துதான் இந்தியாவை ஆட்சி செய்யும் என்றால் அந்த கருத்தே நமக்கு தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை வேளாண் சட்டத்தில் சீர்திருத்தம் தொடர்பில் குறிப்பிடுகையில், சீர்திருத்தம் என்ற பெயரில் வேளாண்மையை சீர்குலைத்து விடக்கூடாது.

வணிகர்கள் விவசாயிகள் கூலித் தொழிலாளர்கள், கலந்துப் பேசி சீர்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். நாட்டில் மதச்சார்பின்மையின் மீது முழுமையாகத் தாக்குதல் நடந்து வருகிறது.

இது வெறும் சட்டம் மட்டுமல்ல. நம் நாடு, நம் கலாசாரம். மதச்சார்பின்மை மீது நடக்கும் தாக்குதல், நமது கலாசாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் நடக்கும் தாக்குதல் ஆகும்’ எனவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.