July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டெல்லி விவசாயிகளின் போராட்டம்: ஐநா ஆணையாளரின் கருத்து பக்கச்சார்பானது என்று இந்தியா சாடல்

இந்தியாவில் தொடர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வரும் விவசாயிகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட கருத்துக்களுக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்திய விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் குறித்து சுட்டிக்காட்டிய ஐநா மனித உரிமைகள் ஆணையாளர், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிரான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்தும் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நெருக்கடி நிலையில், விவசாயிகளுடனான பேச்சுவார்த்தைகள் உரிமைகளை மதித்து, சமமான தீர்வுக்கு வழிவகுக்கும் எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டங்கள் இடம்பெறும் பகுதியில் தொடர்பாடல் வசதிகள் துண்டிக்கப்பட்டமை, வர்த்தகம், வாழ்வாதாரம், கல்வி, சுகாதார தேவைகள் என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்பாடல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கவலையளிப்பதாகவும் ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்குப் பதிலளித்துள்ள இந்தியா, ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் கருத்துக்கள் புறநிலை மற்றும் பக்கச்சார்பானவை எனத் தெரிவித்துள்ளது.