July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்தாரா சசிகலா?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி சசிகலா தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் .

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள், முக்கிய பிரமுகர்கள் சசிகலாவை சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றதாக சொல்லப்படுகிறது.

இதில் யாரும் எதிர்பாராத வகையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் இமயம் பாரதிராஜா, சரத்குமார் ,ராதிகா என பல முக்கிய பிரமுகர்கள் வந்து சந்தித்திருப்பது பல கேள்விக்கணைகளை எழுப்பியிருக்கிறது .

சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி வந்த பிறகு இடைப்பட்ட காலத்தில் அரசியல் நகர்வுகள் என பெரிதாக எதுவும் வெளிப்படையாக எடுக்கப்படவில்லை .

ஆனால் இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அதிமுகவின் கூட்டணி கட்சிகளும்,முக்கிய நபர்களும் வந்து சசிகலாவை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சசிகலா மீண்டும் தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாரா என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

சென்னை தியாகராயநகரில் உள்ள இல்லத்தில் ஜெயலலிதா உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் பேசிய சசிகலா,ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன் என கூறியிருக்கிறார்.

இது தமிழக அரசியலில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இதற்கு பதிலளித்துள்ள அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா அழைப்பு விடுத்தது அதிமுகவினருக்கு பொருந்தாது எனக் கூறியிருக்கிறார்.

மேலும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவரது மனைவி ராதிகாவுடன் வந்து சசிகலாவை சந்தித்து பேசினார்.

நன்றி மறப்பது நன்றன்று என்ற எண்ணத்தில் சந்தித்ததாக இருவரும் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றனர் .

மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் சசிகலாவை வீட்டிற்கு சென்று சந்தித்து பேசியுள்ளனர்.

இந்நிலையில் சசிகலா அடுத்த காய் நகர்த்தலை தொடங்கி விட்டாரா என பலரும் பேசி வருகின்றனர் .சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் தமிழகத்தில் அமைதியான போக்கு நிலவுகின்ற இந்த சந்தர்ப்பத்தில் சசிகலாவின் சில செயற்பாடுகள் ஓங்குமே. ஆனால் அதிமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துவிடும் என விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

மேலும் சசிகலா விடுத்துள்ள அறிக்கையில், கழக பொதுச்செயலாளர் என்று அவர் அதிமுக கொடியுடன் அறிக்கை விட்டிருக்கிறார். இந்நிலையில் அதிமுகவிற்கு பெரும் சவாலாக அமைந்திருக்கும் இந்த சட்டமன்ற தேர்தலில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.