January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுடன் இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திப்போம்’- சசிகலா

(Photo: Shilpa Nair/Twitter)

ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு துணைநிற்பேன். அவர்களுடன் ஒன்றாக இணைந்து சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பேன் என சசிகலா தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘என்னுடைய அக்கா புரட்சி தலைவியின் பிறந்த நாளையொட்டி இங்கு வந்துள்ள கழக உடன்பிறப்புகள், பொது மக்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம், விரைவில் தொண்டர்கள், பொதுமக்களையும் சந்திக்க உள்ளேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு நான் துணை நிற்பேன். தொண்டர்கள் ஒன்றாக இணைந்து மீண்டும் ஆட்சி தொடர வேண்டும் என்பதே என் விருப்பம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளன்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் ஜெயலலிதாவுடனான 33 ஆண்டுகள் பயணத்தை நினைத்தே வாழ்நாளை கழித்துவிடலாம் என இருந்தேன், இருந்தாலும் இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் இருக்கும் அதிமுகவை கீழிறக்கிவிடக் கூடாது என்ற அக்கறை, தொண்டர்களின் கட்டளையால் பொதுவாழ்வு என்ற வேள்வியில் என்னை அர்ப்பணித்துக்கொண்டேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. அதிமுகவையும் தமிழ்நாட்டையும் கண்களெனக் காத்திடச் சூளுரைப்போம் எனவும் இந்தக் கடிதத்தை அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எழுதியுள்ளதாகக் சசிகலா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.