July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: அரசு விழாவாக கொண்டாட்டம்

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில், இந்திய பிதமர் நரேந்திர மோடி ஜெயலலிதா குறித்த நினைவுகளை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையுமான ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்களால் இன்றும் போற்றப்படுகின்றார்.

தமிழகத்தில், இந்த ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் தமிழ்நாடு உயர்கல்விமன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் உருவச் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னைக் கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

அத்தோடு ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த நாள் விழாவை அதிமுக கட்சியினர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கொண்டாடினர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

‘நமது புரட்சித் தலைவி அம்மா’ என்னும் பெயரிலான சிறப்பு மலரை வெளியிட்டதுடன், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றையும் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொடங்கி வைத்தனர்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 73 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் ஜெயலலிதா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா ஆகியவற்றையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் .

 

பெண்களுக்கு அதிகாரம் வழங்கியவர் ஜெயலலிதா – மோடி


ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டிப் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அவரது படத்துடன் பதிவிட்டுள்ளார்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான முயற்சிகளை எடுத்தவர் ஜெயலலிதா எனப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மக்கள் சார்ந்த கொள்கைகளைச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கு அதிகாரமளித்ததற்காக ஜெயலலிதா பரவலாகப் போற்றப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுடனான கலந்துரையாடல்கள் தன் மனத்தில் இன்னும் நீங்காமல் நிறைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஹாப்பி பர்த்டே அம்மா’ போன்ற ஹேஸ்டேக்குகள் வைரலாகி வருகிறது.