July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலை’: மக்கள் மன்றம் செல்லப் போவதாகக் கூறுகிறார் ஸ்டாலின்

(FilePhoto)

ஜனநாயக படுகொலையையே இலட்சியமாக கொண்டுள்ள மத்திய பாஜக அரசு புதுச்சேரியிலும் அதனை செய்துள்ளதாக முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதேநேரம் பாஜக அரசு நிகழ்த்தியுள்ள இந்த படுகொலையை கண்டித்து திமுக –காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக கூட்டணியிலான அரசு அங்கு நடைபெற்று வந்த நிலையில் , தேர்தல் நெருங்கும் சமயத்தில் அங்கு அமைச்சரவையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக காங்கிரஸ் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.

துணை நிலை ஆளுநரான கிரண் பேடியைக்கொண்டு புதுச்சேரி யூனியன் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசின் உரிமைகளைப் பறித்ததுடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

அதனை எதிர்த்து நாராயணசாமியும் கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.

பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளையும் சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து தனது முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி.

ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன். தமிழகத்துடன் இணைந்து புதுச்சேரியும் சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க உள்ள நிலையில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பாஜக அரசு.

இதனை மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது. அதனால் இதனைக் கண்டித்து திமுக –காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும் எனவும்  ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.