November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதுச்சேரி: தொடரும் பதவி விலகல்களால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி

(FilePhoto: V.Narayanasamy/Facebook)

புதுச்சேரியில் ஒரே நாளில் இரு காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளதால் அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது.

புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்களான எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகியோர் பதவி விலகியுள்ளனர்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்குள்ள காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தார்.

நாளைய தினம் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவதாக நாராயணசாமி குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதேநேரம் ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12ஆக குறைந்துள்ளதுடன் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 14ஆக காணப்படுகிறது.

இதுவரை 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இராஜினாமா செய்த நிலையில், தற்போது கூட்டணிக் கட்சியான திமுக சட்டப்பேரவை உறுப்பினரும் இராஜினாமா செய்துள்ளது ஆளும் நாராயணசாமி அரசுக்கு பெரும் நெருக்கடியைத் தந்துள்ளது.

இதேவேளை இன்று இரண்டு உறுப்பினர்களின் இராஜினாமா கடிதத்தையும் பெற்றுக்கொண்ட சபாநாயகர் சிவகொழுந்து, அதை சட்டப்பேரவை செயலரிடம் தந்துள்ளதாகவும், சட்டத்திற்கு உட்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்  தெரிவித்துள்ளார்.