இந்திய தமிழ்நாடு அரசு திரைப்படக் கலைஞர்களுக்கு 2021ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பு செய்த , சிறந்த திறமையான கலைஞர்களை கௌரவிக்கும் வகையிலும், கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் ஆண்டுதோறும் கலைமாமணி விருது அறிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சௌகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், சங்கீதா, தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர்கள் இமான், தினா, இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கலைப்புலி தாணு ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொலைக்காட்சி நடிகைகளான நித்யா, சாந்தி வில்லியம்ஸ், நடிகர்களான நந்தகுமார், இதுதவிர பாடலாசிரியர்கள், நடன இயக்குநர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், என மொத்தம் 42 பேருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது.