July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தேர்தல் நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை பாஜக தொடங்கியுள்ளது’

அதிகார பலத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கைவந்த கலை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜனாமா செய்துள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து புதுச்சேரியில் வரும் திங்கட்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டிருக்கிறார்.

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி நீக்கப்பட்டு, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பின் போது, உறுப்பினர்கள் தங்களது கையை உயர்த்தி காட்ட வேண்டுமெனவும்,மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பை நிறைவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் உத்தரவை அடுத்து, முதல்வர் நாராயணசாமி தன்னுடைய எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் .

தேர்தல் நேரத்தில் ஆட்சிக் கவிழ்ப்பு வேலையை பாஜக தொடங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள நாராயணசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிகார பலத்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சியை மாற்றுவது பாஜகவுக்கு கைவந்த கலை எனவும் விமர்சித்துள்ளார்