October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஷப்னம் அலி: சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படவுள்ள முதல் பெண் கைதி

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக ‘பெண் கைதி’ ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றுவதற்கான தயார்படுத்தல்கள் நடந்துவருகின்றன.

தனது காதலுக்கு சம்மதிக்காத காரணத்திற்காக 10 மாத குழந்தை உட்பட தனது குடும்பத்தினர் ஏழு பேரை கொலை செய்த ஷப்னம் அலி (ShabnamAli)  என்ற பெண்ணுக்கே இவ்வாறு மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.

இந்தியாவின், உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டம் வன்கேடா கிராமத்தில் உள்ள பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றிய ஷப்னம், படிக்காத- கூலித் தொழிலாளியான சலீம் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் திருமணத்துக்கு ஷப்னத்தின் பெற்றோர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஷப்னத்தின் ஒட்டு மொத்தக் குடும்பமும் இரவோடு இரவாக மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

அடையாளம் தெரியாத சிலர், ஷப்னத்தின் ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் கொன்றுவிட்டுச் சென்றதாக ஷப்னம் பொலிஸாரிடம் கூறியபோதும், விசாரணையில் இந்தக் கொலைகளை ஷப்னமும் அவரது காதலன் சலீமும் இணைந்து செய்துள்ளமை தெரியவந்தது.

குடும்பத்தினர் அனைவருக்கும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு சலீமை வரவழைத்த ஷப்னம், அவருடன் சேர்ந்து பெற்றோர் மற்றும் 10 மாதக் குழந்தை உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கழுத்தறுத்துக் கொன்றுள்ளார்.

கொலை நடந்த இடத்தில் கிடைத்த தூக்க மாத்திரைகள் மற்றும் சிம் அட்டை, கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கோடரி ஆகிய தடயங்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இருவரும் திட்டமிட்டு கொலை செய்துள்ளமை உறுதியானது.

இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதாகும் போது இரண்டு மாதக் கர்ப்பிணியாக இருந்த ஷப்னம் சிறையில் தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.

இந்த வழக்கில் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்த போதும் அலகாபாத் மேல்நீதிமன்றம் 2010 இலும், உச்ச நீதிமன்றம் 2015 இலும் இருவரின் மரண தண்டனையையும் உறுதி செய்தன.

எனினும் இருவரும் கடைசி முயற்சியாக, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பிய போதும் அது நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தூக்கிலடப்படும் நாளை எதிர்நோக்கியுள்ளனர்.

ஷப்னம் மற்றும் அவரது காதலன் சலீம் தூக்கிலிடப்படும் திகதி இறுதி செய்யப்படாத நிலையில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான திகதி, விரைவில் முடிவாகும் என கூறப்படுகின்றது.

உத்தர பிரதேசம் மதுராவில், 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட சிறையில் பெண்களை தூக்கில் இடுவதற்காக உள்ள தனி அறையில் ஷப்னத்துக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

‘நிர்பயா’ குற்றவாளிகளை தூக்கிலிட்ட, மீரட்டைச் சேர்ந்த பவன் ஜலாட் தான் ஷப்னத்தையும் தூக்கிலிடுவதற்கான பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவருக்கான தண்டனை நிறைவேற்றப்பட்டால், சுதந்திரத்துக்கு பின் இந்தியாதில் தூக்கிலிடப்பட்ட முதல் பெண் குற்றவாளியாக ஷப்னம் இருப்பார்.

குறித்த கொலை சம்பவத்தின் பின்பு “ஷப்னம்” என்ற பெயரை தமது குழந்தைகளுக்கு வைப்பதற்கு அந்த பகுதி மக்கள் விரும்புவதில்லை என கூறப்படுகின்றது.