July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐபிஎல்: அதிகூடிய தொகைக்கு ஏலம் போன கிறிஸ் மோரிஸ்

தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளரும் சகலதுறை ஆட்டக்காரருமான கிறிஸ் மோரிஸ் ஐபிஎல் ஏலத்தில் 16.25 கோடி இந்திய ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் வீரரொருவர் அதிகூடிய தொகைக்கு ஏலம் போன முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 292 வீரா்கள் இடம்பெறுகிறார்கள். அதில் இந்திய வீர்கள் 164 பேரும், வெளிநாட்டு வீரர்கள் 125 பேரும்,  அசோசியேட் நாடுகளின் வீரா்கள் 3 பேரும் உள்ளடங்குகின்றனர்.

இவர்களில் இருந்து 8 அணிகளுக்குமென 22 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 61 வீரர்களை தேர்வு செய்யவேண்டும்.

இதன்படி இன்றைய ஏலத்தில் மொயீன் அலியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 கோடி ரூபாய்க்கும், ஷாகிப் அல் ஹசனை கொல்கத்தா அணி 3.20 கோடி ரூபாய்க்கும், தாவித் மலனை 1.5 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஷிவம் துபேவை 4.40 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும், கே.கவுதமை  சிஎஸ்கே அணி 9.25 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்துள்ளன.

இதேவேளை மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவுஸ்திரெலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஏலத்தில் நியூஸிலாந்து வீரர் கெயில் ஜேமிஸன் ஆர்சிபி அணியினால் 15 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதுடன்,  ஹை ரிச்சார்ட்ஸன்14 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியினால் எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் ஏலம் விடப்பட்ட போது, அவரை எடுப்பதற்காக கடும் போட்டிநிலவியது. பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் அவருக்கு விருப்பம் காட்டின.

இதனால் ஏலம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொகை 10 கோடியை தாண்டியது. 10 கோடி ரூபாயை தாண்டியதும் மும்பை இந்தியன்ஸ் பின் வாங்கியது.

ஆனால் ராஜஸ்தான் ரோயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மோதின. கிங்ஸ் பஞ்சாப் விடாமல் 16 கோடி ரூபாய் வரை ஏலம் கேட்டது. இறுதியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் 16.25 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்தது.

இதன்படி ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கபட்ட வீரர்கள் பட்டியலில் கிறிஸ் மோரிஸே முன்னிலையில் உள்ளார்.

இதற்கு முன்னர் 2015 ஆம் ஆண்டில் யுவராஜ் சிங் 16 கோடி ரூபாய்க்கும், 2020 ஆம் ஆண்டில் பாட் கம்மின்ஸ் 15.5 கோடி ரூபாய்க்கும், 2017 ஆம் ஆண்டில் பென் ஸ்டோக்ஸ் 14.5 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.