January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னை சர்வதேச திரைப்பட விழா: “சூரரைப்போற்று” திரைப்படமும் போட்டியில் பங்கேற்பு

18ஆவது சென்னை சர்வதேச திரைப் படவிழா நாளையதினம் ஆரம்பமாகி எதிர்வரும் 25ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த திரைப்பட விழாவில் உலகம் முழுவதும் இருந்து 53 நாடுகள் கலந்துகொள்கின்றன. சுமார் 91 படங்கள் இதில் பங்கேற்கவுள்ளதுடன் தமிழ்ப்படப் பிரிவில் 13 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இந்த விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் ‘பாஸ்வேர்டு,அக்கா குருவி’ உள்ளிட்ட 17 திரைப்படங்கள் இடம்பெறுகின்றன.

மேலும், தமிழ்ப் படங்களுக்கான போட்டியில் “லேபர், கல்தா, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள் , மழையில் நனைகிறேன், மை நேம் இஸ் ஆனந்தன், கோட்ஃபாதர், தி மஸ்கிட்டோ பிலாசபி, சீயான்கள், சம் டே, காளிதாஸ், க/பெ ரணசிங்கம், கன்னி மாடம்”ஆகிய 13 தமிழ் திரைப்படங்கள் பங்கேற்கின்றன.

தொடக்க விழா திரைப்படமாக பிரான்ஸ் நாட்டின் ‘தி கேர்ள் வித் எ பிரேஸ்லெட்’ படமும், நிறைவு விழா திரைப்படமாக ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ‘ஐ வாஸ், ஐ ஆம், ஐ வில் பி’ திரைப்படமும் திரையிடப்படவுள்ளது.

திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள திரைப்படங்கள் அனைத்தும், சென்னையிலுள்ள பிவிஆர் மல்டிபிளெக்ஸ் சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரின் அரங்குகள் மற்றும் காசினோ திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.

இதேவேளை சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.75 இலட்சம் நிதியுதவி அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.