புதுச்சேரியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையையை இழந்துள்ளது.
இதனால் புதுச்சேரி அமைச்சரவை நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதுடன், நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை மீதான அதிருப்தியினால் எம்.எல்.ஏக்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ்,தீப்பாய்ந்தான் ஆகிய மூவரும் ஏற்கனவே தங்களது பதவியை ராஜனாமா செய்திருந்தனர். தற்போது எம்எல்ஏ ஜான்குமாரும் பதவி விலகி இருப்பதால் அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது.
ஏற்கனவே காங்கிரஸின் பெரும்பான்மைக்கு 15 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், தற்போது திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்களையும் சேர்த்து ஆளும் கட்சியின் பலம் அமைச்சரவையில் 14 ஆக உள்ளது.
எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணியின் பலம் 14 ஆக இருக்கிறது.
தற்போதைய நிலையில் அமைச்சரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகள் சம பலத்துடனே உள்ளன.
காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதால், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை உடனடியாக பதவி விலக வேண்டும் என அதிமுக சட்டமன்ற குழு தலைவர் அன்பழகன், பாஜக, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக வலியுறுத்தி வருகின்றன.