July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கைது குறித்து வலுக்கும் கண்டனங்கள்!

File image : Twitter @climatedisha

வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக டுவிட்டர் பதிவை பகிர்ந்தமைக்காக இந்தியாவின் 22 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, கைது செய்யப்பட்டுள்ளமைக்கு புதுடெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் பிரபளங்களும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிடுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள ‛டூல் கிட்’ எனப்படும் செய்தி தொகுப்பை சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த ‘டூல் கிட்’ வன்முறைகளை தூண்டியதற்கு காரணமாகியுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில் இந்த டூல்கிட்டை பெங்களூருவை சேர்ந்த பெண் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து திஷா ரவி மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, டில்லி பொலிஸின் சைபர் பிரிவு அவரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட திஷா ரவி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 5 நாள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இவரது கைது குறித்து பல அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட 21 வயது திஷா ரவி கைதுசெய்யப்பட்டமை ஜனநாயகத்தின் மீது முன்னொரு போதும் இல்லாத வகையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என புதுடெல்லி முதல்வர் அர்விந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

 

திமுக தலைவர் முக ஸ்டாலினும் திஷா ரவி கைதுசெய்யப்பட்டமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

திஷா ரவி கைதுசெய்யப்பட்டமை கவலையளிக்கின்றது, அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை கொடுங்கோல் வழிகளில் அடக்குவது சட்டத்தின் ஆட்சி என தெரிவித்துள்ள ஸ்டாலின் இளைஞர்களிடமிருந்து எழும் குரல்களுக்கு பாஜக அரசாங்கம் மதிப்பளிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.