பொது வெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென தனது ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மை நாட்களாக அஜித்தின் ரசிகர்கள் எனக் கூறிக்கொண்டு அவருடைய வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சில நிகழ்வுகளில் சிலர் கூச்சலிட்டு வந்தனர்.
இந்நிலையில் இதனை அறிந்த அஜித் குமார் தற்போது அறிக்கை வாயிலாக தனது ரசிகர்களுக்கு வேண்டுகோளொன்றை விடுத்துள்ளார்.
என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டிருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம் என்று தனது அறிக்கையை அவர் ஆரம்பித்துள்ளார்.
அதில் கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அரசு மற்றும் அரசியல் ,விளையாட்டு என பல்வேறு இடங்களில் சிலர் செய்துவரும் செயல்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னரே அறிவித்தபடி படம் குறித்த தகவல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும், அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன் எனவும், அதுவரை பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என்றும் அஜித்குமார் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில், நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களை சமுதாயத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும்.
இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும் சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.