November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியாவின் பாஜக இலங்கை- நேபாளத்தில் ஆட்சியமைக்கத் திட்டம்’: திரிபுரா முதல்வரின் கருத்தால் சர்ச்சை

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் பாஜக உள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்ததாக திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் குமார் டெப் தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் செய்திருந்த அமித் ஷா, ‘இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர், பாஜக இலங்கை மற்றும் நேபாளத்திலும் ஆட்சியமைக்கும் திட்டத்தில் உள்ளது’ எனத் தெரிவித்ததாக பிப்லாப் குமார் டெப் குறிப்பிட்டுள்ளார்.

திரிபுரா மாநில முதல்வரின் கருத்தால், இந்தியா, இலங்கை மற்றும் நேபாளத்தில் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷாவின் தலைமைத்துவத்தைப் பாராட்டியுள்ள பிப்லாப் டெப், கம்யூனிச கட்சிகளின் பதிவுகளை உடைத்துக்கொண்டு, பாஜக உலகின் மிகப் பெரிய கட்சியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

திரிபுரா மாநில முதலமைச்சர் வெளிப்படுத்தியுள்ள விடயம், ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றும் ஏனைய நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அமித் ஷா வெளிநாடுகளின் ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக ‘விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றும் எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.