July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கை தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்த இந்தியா தொடர் நடவடிக்கை எடுக்கும்’ :தமிழகத்தில் மோடி

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஒரே பிரதமர் நான் மட்டுமே. அதேபோல அங்கு வாழும்  தமிழ் மக்களின் நலன் குறித்து அரச தலைவர்களிடம் வலியுறுத்தும் ஒரே அரசு மத்திய அரசு தான் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இதேநேரம் மெட்ரோ ரயில் திட்டம், மின்சார ரயில் திட்டம், கல்லணைத் திட்டம், அர்ஜூன் பீரங்கி தயாரிப்புத் திட்டம் என்பனவற்றை மோடி  தொடக்கி வைத்துள்ளார்.

இதன்போது கடந்த கால அரசுகளைவிட தற்போதைய மத்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு பல்வேறு விதமாக உதவிசெய்து வருகின்றதுடன் சென்னை – யாழ்ப்பாணம் இடையிலான விமான சேவையும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு இலங்கைத் தமிழர்களுக்காக சுமார் 50ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது. இலங்கையில் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை மத்திய அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவதுடன் தற்போது இலங்கை சிறைகளில் தமிழக மீனவர்கள் ஒருவர் கூட இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகின் தொன்மையான மொழி தமிழ் எனவும் ‘வணக்கம் சென்னை’ ‘வணக்கம் தமிழ்நாடு’ என்று கூறி உரையை ஆரம்பித்தார்.

அத்தோடு இன்று தொடங்கப்பட்டுள்ள அபிவிருத்தி நலத்திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யும். நீர் நிலைகளை சரியாகப் பயன்படுத்தியதற்கும் உணவு தானியங்கள் தயாரிப்பில் வரலாறு படைத்ததற்காகவும் தமிழ்நாட்டின் விவசாயிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறேன் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.