November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய நிலப்பகுதிகள் சீனாவுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளன: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

(Photo:Rahul Gandhi/Twitter)

இந்திய நிலப் பகுதிகள் சிலவற்றை சீனாவுக்கு தாரைவார்த்து விட்டதாகவும் இந்திய இராணுவத்தினரின் தியாகத்தை அவமதிக்கின்றனர் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சீனா சில பகுதிகளில் இருந்து பின்வாங்க மறுத்துவிட்டதை சுட்டிக்காட்டியுள்ள ராகுல்காந்தி, மோடி சீனாவுக்கு பணிந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பிரதமர் ஒரு கோழை, அவர் சீனர்களுக்கு எதிராக நிற்க முடியாது. அவர் இராணுவ வீரர்களின் தியாகத்தை துச்சமென எண்ணி அவற்றை காட்டிக் கொடுக்கிறார் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் சீனா நுழைந்த இடத்தில் மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

உண்மை என்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் நாட்டிற்குப் பதிலளிக்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் மூலம், பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைகளில் படைகளைக் குறைப்பதற்கான உடன்படிக்கைக்கு வழி ஏற்பட்டது. இந்தியாவில் இருந்து ஓர் அங்குல நிலத்தைக்கூட விட்டுத் தர மாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்தவிடயம் தொடர்பில் நேருவிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும், நேரு காலத்தில் அரசு எடுத்த முடிவுகள் தான் இதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் 1962ஆம் ஆண்டு முதல் 43 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும் சர்ச்சைக்குரிய அப்பகுதி இந்திய வரைபடத்தில் உள்ள பகுதிதான் என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.